புதிய நிறுவனங்களை சந்தையில் நுழைய அனுமதிக்க புதிய உரிம சுற்றுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் நாட்டின் மசகு எண்ணெய் தொழிலை மேலும் தாராளமயமாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் மசகு எண்ணெய் சந்தையில் உயர் தரம் மற்றும் புதுமையான தயாரிப்புகளுடன் நுழைவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக புதிய நிறுவனங்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை அமைச்சரவையின் அனுமதியை கோரியிருந்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம் நுகர்வோர் அதிக போட்டி விலையில் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சட்டம் (இல. 28, 1961) மற்றும் அதனுடன் இணைந்த திருத்தப்பட்ட விதிகள், மசகு எண்ணெய் தொழிற்துறையில் நுழைவதற்கு புதிய விண்ணப்பதாரர்களை தெரிவு செய்வதற்கும் அதற்கேற்ப உரிமங்களை வழங்குவதற்கும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.