பிரேசிலின் தீவிர வலதுசாரி கட்சியின் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்ட, பிரேசிலின் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தை மீண்டும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோ, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், பிரேசிலின் இடதுசாரி கட்சியின் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வாவிடம் தோல்வியடைந்தார்.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்க மறுத்த அவரது ஆதரவாளர்கள், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரேசிலின் இராணுவத் தலையீடு மற்றும் புதிய ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், அந்தநாட்டின் தலைநகரான பிரேசிலியாவின் உயர்நீதிமன்றை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பிரேசிலின் தேசிய கொடியுடன் ஜனாதிபதி மாளிகைக்கு பிரவேசித்த அவர்கள் மீது பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்களை நடத்தியுள்ளனர்.
இதேவேளை, சாவ் பாலோ மாநிலத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவிர பாசிஸவாதிகள் என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் அவர்களுக்கு எதிராக நடவடிககை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.