யால தேசிய பூங்காவில் STF அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், ஐந்து கோடி பெறுமதியான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யால தேசிய பூங்காவின் வெஹெரகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் எழுபதாயிரம் கஞ்சா மரங்கள் மிகவும் சிறப்பாக வளர்க்கப்பட்டிருந்ததாகவும், அவை பத்து அடி உயரம் கொண்டதாகவும், அவற்றின் பெறுமதி 5 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களிடம் இருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஊவா குடாஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் கதிர்காமம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.