பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானி இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளமையால் அவரது பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கஞ்சிப்பானி இம்ரானுக்காக அவரது சகோதரரும் வேறொருவரும் பிணையாளர்களாகினர்.
கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான், வௌிநாட்டுப் பயணத் தடை உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 20ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்டு 5 நாட்களின் பின்னர் கஞ்சிப்பானி இம்ரான் தமிழ்நாடு – இராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு பிரவேசித்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு வௌிக்கொணர்ந்தது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என கஞ்சிப்பானி இம்ரானுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், அவர் அவ்வாறு முன்னிலையாகாத நிலையில் அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
அதற்கமைய, கஞ்சிப்பானி இம்ரானின் சகோதரரையும் மற்றைய பிணையாளரையும் எதிர்வரும் மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ள வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.