தாதியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ரயில் சாரதிகள் உள்ளிட்ட விசேட அரச ஊழியர்களின் ஓய்வூதியக் காலம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வது குறித்து பொது நிர்வாக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் சுமார் 30,000 அரச ஊழியர்கள் சேவைகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்புலத்தில் அமைச்சு இதனை கூறியுள்ளது.
சில விசேட துறைகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைந்தபட்சம் 65 ஆக அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று(02) பொது நிர்வாக அமைச்சில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் எனினும் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்கள் பணியாற்றுவதாக செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.