இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சென்யோங்-ரி கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணத்துக்காக இலங்கை இன்னும் விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கோரிக்கை விடுக்கப்பட்டால், அதை பரிசீலிக்கலாம் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
எவ்வாறாயினும், அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்த உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டமொன்றுக்கு வருவதினூடாக, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கவும், வளர்ச்சியை நிலையான திசையில் செலுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.