தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரை கொலை செய்ததாக கூறப்படும் நபர், கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமஸூக்கு அனுப்பியதாக நம்பப்படும் குறுஞ்செய்தியை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளதாக அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குறுஞ்செய்தி கொலையாளியால், தினேஷ் ஷாப்டரின் தொலைபேசியின் ஊடாக அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரை மேற்கோள் காட்டி அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தினேஷ் ஷாஃப்டரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பிரையன் தோமஸின் தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட, இந்தக் குறுஞ்செய்தி, பொரளை பொது மயானத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக நம்பப்படுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குறுஞ்செய்தியில், I’m waiting for you (நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தமக்கு சந்திக்கும் எண்ணம் இல்லை என்று தோமஸ் அக்குறுஞ்செய்திக்கு பதிலளித்திருந்தார்.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று, தினேஷ் ஷாப்டர், ஃப்ளவர் வீதியில் உள்ள தமது வீட்டிலிருந்து நேரடியாகவே, பொரளை பொது மயானத்திற்கு வந்ததாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.