சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சேமித்து வைக்க முடியாத காரணத்தினால் மீண்டும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக மூடப்பட்டு அதன் பணிகள் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால் சுத்திகரிப்பு பொருட்கள் தேவையான தரத்திற்கு எரிபொருள் உற்பத்தி செய்யப்படும் வரை சேமித்து வைக்கப்பட வேண்டும்.
அதற்காக ஒரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒரு வருடத்திற்கு தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்று அதன் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இவ்வருடம் பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டமையினால் சுத்திகரிப்பு பொருட்கள் தற்போது கிடங்குகளில் குவிந்து கிடப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டிற்கு போதியளவு கச்சா எண்ணெயை கொண்டுவரும் திறன் இன்மையால் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை தேவையான தரத்தில் சந்தைக்கு அனுப்பும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சந்தைக்கு வெளியிடுவதற்கு குறைந்தது இரண்டு வருடங்களுக்கு போதுமான கச்சா எண்ணெயை நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.