உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே கடந்த வாரம் தந்தையே மகளைக் கொன்று சூட்கேஸுக்குள் வைத்து சாலையோரம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெற்றோருடன் டெல்லியில் வசித்து வந்த ஆயுஷி டெல்லி கல்லூரி ஒன்றில் உயர் கல்வியை தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில், ஆயுஷி தனது குடும்பத்தினரின் எதிர்ப்புடன் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
எனினும், ஆயுஷி அதனை பொருட்படுத்தாமல், தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்துள்ளார்.
அதில் ஆத்திரமடைந்த ஆயுஷியின் தந்தை தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் மகளை சுட்டுக் கொன்றுள்ளதுடன், அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து மதுராவில் உள்ள சாலையோரம் வீசியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று குறித்த சூட்கேஸ் சாலையோரம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
பொலிஸார் மரணமடைந்த பெண் குறித்து விசாரணையை ஆரம்பித்தனர். அத்துடன், அவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
அந்த சடலத்தின் முகம் மற்றும் தலையில் ரத்தம் இருந்துள்ளதுடன், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அப்பெண் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்நிலையில், சடலத்தை அடையாளம் காண்பதற்காக ஆயுஷியின் பெற்றோர் வந்த வேளை, அவரின் தந்தையின் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்துள்ளது.
அதன் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது மகளை ஆணவக்கொலை செய்ததாக ஆயுஷியின் தந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சடலத்தை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய காரையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.