திருகோணமலை – புல்மோட்ட முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்குமாறு கோரி, பாடசாலைக்கு முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 1,200 மாணவர்கள் கற்கும் குறித்த பாடசாலையில் 23 ஆசிரியர்கள் மட்டுமே கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அப்பாடசாலையில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க சுமார் 70 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும், ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்குமாறு கோரியும் மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தகவலறிந்த வலய கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன்போது மாணவர்களால் பாடசாலையின் அதிபரும் ,வலய கல்வி அதிகாரிகளும் அறையொன்றில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.