17 வயது சிறுமியின் பேஸ்புக் கணக்கை திருடி, அந்தக் கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்தி சமூகமயப்படுத்தினார் என குற்றம்சாட்டி தொலைபேசி பழுதுபார்ப்பவர் மீது முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சந்தேக நபரிடம், தனது தொலைபேசியை பழுதுபார்ப்பதற்குக் கொடுத்ததாகவும், சில மணித்தியாலங்களின் பின்னர் பழுதுபார்த்து அதனை தன்னிடம் கொடுத்ததாகவும் சிறுமி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் கைத்தொலைபேசியை சோதித்தபோது அதிலிருந்து தனது முகநூல் கணக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டிருந்தமையினால் மீண்டும் சந்தேக நபரிடம் கூறி புதிய பேஸ்புக் கணக்கு ஒன்றை செயற்படுத்தியதாகவும் சிறுமியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு நாட்களுக்குப் பின்னர் பல நண்பர்கள் குறித்த சிறுமியை தொலைபேசியில் அழைத்து, ‘என்ன செய்கிறீர்கள், பைத்தியக்காரத்தனமான காரியங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறியபோதே தனது பேஸ்புக் கணக்கு இவ்வாறு திருடப்பட்டமை தெரிய வந்ததாகவும் அந்தச் சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.