இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளதுடன், அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 3.4 மில்லியன் எனும் இருமடங்காக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையில் 1.7 மில்லியன் மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஜூன் மாதம் ஐ.நா முகவரமைப்புக்கள் மதிப்பிட்டிருந்தன.
தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க 79 மில்லியன் டொலர்களை திரட்டியதாகவும், ஆனால் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு மேலதிகமா 70 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கொழும்பில் உள்ள ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
“தொடர்ச்சியான இரண்டு பருவகால மோசமான அறுவடை, அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் வீட்டை கொள்வனவு செய்யும் சக்தி குறைவடைந்துள்ளதால், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், கடந்த ஆண்டு தொடக்கம் பணவீக்கம், மின் தடைகள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்றவற்றை எதிர்க் கொண்டு வருகிறது.
ஏப்ரல் நடுப்பகுதியில் நாடு அதன் $51 பில்லியன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை மற்றும் IMF உடன் $2.9 பில்லியன் பிணை எடுப்புக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட 2.1 மில்லியன் மக்களுக்கு உணவளிப்பதையும், 1.5 மில்லியன் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்குவதையும் அதன் திருத்தப்பட்ட திட்டமாக ஐ.நா கொண்டுள்ளது