யாழ்ப்பாணத்தில் இருந்து தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தடங்களை பரிசோதித்தல் , நேர கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற சில நடைமுறைகளை அமுலாக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் – கொழும்பு மற்றும் ஏனைய இடங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சேவையை மேற்கொள்ளும் பேருந்துக்களின் வழித்தட அனுமதிகளை பரிசோதிப்பது.
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில், வடமாகாணத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தரித்து நின்று குறைந்தது 10 நிமிடங்களாவது ஓய்வெடுத்து செல்ல கூடியவாறான நிலையை உருவாக்குதல்.
ஒவ்வொரு மாத இறுதியிலும், நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துக்களின் தரத்தினை பரிசோதித்து , அதனை உறுதிப்படுத்தி கொள்ளல். பேருந்து பயணத்திற்கான நேர கட்டுப்பாடுகளை விதித்தல் போன்றவை அவற்றுள் அமைவதாக தெரிவித்துள்ளார்