அரசாங்கத்தின் அனுமதியின்றி அல்லது பொலிஸாரின் அனுமதியின்றி பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்த முடியாது என்ற கருத்தை முற்றாக மாற்றியமைக்க அண்மைய போராட்டத்தின் மூலம் முடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
போராட்டம் சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகத்திற்கும் பொலிஸார் தனிப்பட்ட முறையில் அறிவித்தனர்.
இந்த அறிவித்தலை தாம் உள்ளிட்ட எவரும் பொருட்டாக கொள்ளவில்லை என்றும் ஜனநாயக ரீதியாக சுயமாக செல்வதற்கும், போராட்டத்திற்கு செல்வதற்கும், போராட்டம் நடத்துவதற்குமுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முடிந்தமை நேற்று அடைந்த பாரிய வெற்றியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது இந்நாட்டின் மாற்று அரசாங்கம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.