அவுஸ்திரேலியாவில் உள்ள தனது ஹோட்டல் அறையை வீடியோக செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த ரசிகர் ஒருவரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விமர்சித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியுடன் கோலி அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
‘கிங் கோலியின் ஹோட்டல் அறை’ என்ற தலைப்புடன், குறித்த அறையில் நபர் ஒருவர் உலாவும் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
இருப்பினும், கிரிக்கெட் வீரரின் அறைக்குள் குறித்த நபர் எவ்வாறு நுழைந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வீடியோவுக்கு பதிலளித்த விராட் கோலி, ‘இந்த வீடியோவை பார்க்க பயமாக உள்ளது. மேலும் இது எனது தனியுரிமை மீறும் நடவடிக்கை’ என கூறினார்.
‘ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைச் சந்திப்பதில் உற்சாகமடைகின்றனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ பயங்கரமானது மற்றும் இது எனது தனியுரிமையை பாதிக்கும் நடவடிக்கையாகும். எனது ஹோட்டல் அறையிலேயே எனக்கு தனியுரிமை இல்லையென்றால், அதை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்? தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும், அவர்களை பொழுதுபோக்கிற்கான பண்டமாக கருத வேண்டாம்’ என அவர் பதிவிட்டுள்ளார்.