தமது நாட்டில் வர்த்தக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள மேற்கத்தேய நிறுவனங்களின் சொத்துக்களை தம்மால் கைப்பற்ற முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யாவில் இயங்கிவரும் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தற்காலிகமாக தமது வர்த்தக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளன.
இந்த பொருளாதாரத் தடை ரஷ்யாவின் மத்திய வங்கி உட்பட அதன் நிதித் துறையின் பெரும்பகுதியை பாதித்துள்ளது, ரஷ்ய பொருளாதாரத்தில் இது ஒரு ஆழ்ந்த மந்தநிலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ரஷ்ய பிரதமர் மைக்கல் மிஷுஸ்டின், இது தொடர்பாக ஒரு சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் வெளிநாட்டு உரிமையாளர்கள் நியாயமற்ற முறையில் நிறுவனத்தை மூடினால், அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களின் மீதான அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அதன் உரிமையாளரின் முடிவைப் பொறுத்து, நிறுவனத்தின் எதிர்கால தலைவிதி தீர்மானிக்கப்படும்.
இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் கைப்பற்றபட்டு தொழில் செய்ய விரும்பும் மாற்று நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க திறைசேரி செயலர் ஜெனட் யெலன், தற்போதுள்ள மேற்கத்தேய பொருளாதாரத் தடைகளின் விளைவாக ரஷ்யாவின் பொருளாதாரம் அழிவடையும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.