ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக வோர்னர் மீடியா அறிவித்துள்ளது.
யுக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷ்யாவில் தங்களின் வர்த்தகம் மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கொகா கோலா, மெக்டொனல்ட் மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷ்யாவில் தங்களின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தன.
இந்நிலையில், வோர்னர் மீடியா ரஷ்யாவில் அனைத்து வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் கிலர் கூறுகையில்,“இந்தச் சூழலை நாங்கள் உன்னிப்பாகப் கவனித்து வருகிறோம், அதனைக் கவனத்திற் கொண்டு எதிர்கால வணிக முடிவுகள் எடுக்கப்படும். இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்கள் யுக்ரைன் மக்களுடன் உள்ளன. எங்கள் சேனல்களின் ஒளிபரப்பு, ரஷ்ய நிறுவனங்களுடனான அனைத்து புதிய உரிமம் மற்றும் எங்கள் நாடகங்கள், கேம் வெளியீடுகளை தற்காலிகமாக நிறுத்துகிறோம்”. என்றார்
ரஷியாவில் ஏற்கனவே சிஎன்என் ஒளிபரப்புகளை நிறுத்தியதோடு, வார்னர் மீடியாவின் வார்னர் பிரதர்ஸ் ரஷ்யாவில் “தி பேட்மென்” திரைப்படத்தை வெளியிடும் திட்டத்தை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.