யுக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக சுமார் 20 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
போர் காரணமாக யுக்ரைனியர்கள் அண்டைய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வரும் நிலையில், யுக்ரைன் தலைநகரில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பராமரிப்பதற்கும், மீட்பதற்கும் ஆட்கள் இல்லாமல் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யுக்ரைனின் தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள குறித்த மிருகக்காட்சி சாலையில் கொரில்லா குரங்கு, யானைகள் மற்றும் ஒட்டகங்கள் உட்பட சுமார் 4,000 வன விலங்குகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் குண்டு வீச்சினால் ஏற்படும் பலமான சத்தத்தால் விலங்குகள் பயப்படுவதாகவும், எனவே அவை நிலத்துக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த மிருகக்காட்சி சாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அவற்றுக்கான உணவுப் பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மிருகக்காட்சி சாலை எதிர்வரும் 21 ஆம் திகதி தனது 112 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.