துப்பாக்கிதாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த ஜூலை 8 ஆம் திகதி கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
அவர் இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புறப்பட்டுச் சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸ் செல்வதற்கு முன்னதாக ஜப்பானிய பிரதமர் மற்றும் பல அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் வௌிநாட்டுப் பயண காலப்பகுதியில் அவரது அலுவலக பணிகளை நிறைவேற்றுவதற்காக பதில் அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.