இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம், தளவபுரம் வர்கலா நகரிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த பிரதாபன் (62) அவரது மனைவி செர்லி (54), மூத்த மகன் அகில் (26), மருமகள் அபிராமி (24) மற்றும் அவர்களது 8 மாத ஆண் குழந்தை ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு சொந்தமான வீட்டில் இரண்டாவது மாடியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1.45 அளவில் குறித்த வீட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள், தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு பிரிவினர், உடல் கருகி உயிரிழந்த 5 பேரின் சடலங்களை மீட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில் மின் கசிவு எதுவும் ஏற்படவில்லை என கண்டறிந்தனர்.
இதேவேளை, வீடு தீப்பற்றி எரிய ஆரம்பித்த வேளையில் அவ்வீட்டின் அருகே இருந்து 5 உந்துருளிகள் வேகமாக சென்றதாக நேரில் கண்ட சாட்சியாளர் சிலர் தெரிவித்தனர்.
இதனால், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.