நாடாளுமன்றத்தின் ஒருமாத மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக இன்று தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் போதே இந்தவிடயம் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபா எனவும், அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் இங்கு மன்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவதே சிறந்த முடிவு. இருப்பினும், அதற்காக தங்கள் அமைச்சால் பணம் கொடுக்க முடியாது. தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் என்றார்.