நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை எனவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவையான தேங்காய் எண்ணெயை உள்ளூர் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்து விநியோகித்து வருவதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கிலோவொன்றின் மொத்த விலை 680 ரூபா முதல் 700 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேவைக்கேற்ப தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்படாத காரணத்தினால் நாடு முழுவதும் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது சந்தையில் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 600 ரூபா முதல் 700 ரூபாவுக்கு வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கு முன்னர் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 550ரூபா முதல் 600 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.