லேக்ஹவுஸ் நிறுவனத்தை விடுதியாக மாற்றுவதற்கு எவ்வித எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லையென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், லேக்ஹவுஸ் அரச அச்சு ஊடக நிறுவனத்தை விற்பனை செய்தல், விடுதியாக மாற்றுவது தொடர்பில் வெளியான பத்திரிகை செய்தி தொடர்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரச ஊடகங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. எனினும், லேக்ஹவுஸ் உட்படலான அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்கும் செயற்பாடு கனவிலும் கூட மேற்கொள்ளப்படாது.
அங்கு பணியாற்று ஊழியர்களுக்கு எதிர்வரும் மாதங்களில் வேதனம் செலுத்துவது தொடர்பில் சிக்கல் நிலவுகிறது.
முன்னதாக திறைசேரியில் இருந்து பணம் பெறப்பட்டு ஊழியர்களுக்கு வேதனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்தும் இந்த முறைமையை கடைபிடிக்க முடியாது என்றார்.
எவ்வாறாயினும், செலவுகளை குறைத்து இந்த நிறுவனங்களை நட்டத்திலிருந்து மீட்பது தொடர்பான நடவடிக்கைகளை குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஊடக அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.