காலி முகத்திடல் போராட்டத் தளமான கோட்டாகோகமவின் மூன்று முன்னணி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மூன்று உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு பெருமளவிலான நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
எனினும் குற்றப்புலனாய்வுத்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ரட்டா, திலான் சேனாநாயக்க மற்றும் அவிஷ்க விராஜ் கோனார என அழைக்கப்படும் இரத்திது சேனாரத்ன ஆகிய மூன்று செயற்பாட்டாளர்கள் கடந்த வாரம் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் மூன்று புதிய கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும் இந்த மூன்று கணக்குகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து 45 மில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பண வைப்புச் செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வங்கிக்கு வந்ததாகக் கூறப்படும் குறித்த மூவரும் முழுத் தொகையையும் திரும்பப் பெற்றதாகவும் பணத்தைப் பெற்றதற்கான காரணத்தை விசாரித்த வங்கி அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.