டிக்டொக் ஊடாக கெஸ்பேவ – ஜாலியாகொட மாற்றுப் பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 6 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
மாலையில் இருந்து நள்ளிரவு வரையில் பெருமளவான முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வீதியில் சத்தமாக வந்து செல்வதாக 119 பொலிஸ் அவசர அழைப்பு நிலையம் மற்றும் பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் 10 பொலிஸ் அதிகாரிகள் குழு அங்கு சென்று இந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை இக்குழுவினர் ஓட்டிச் சென்ற போது அப்பகுதி மக்களும் விமர்சித்தனர்.
மோட்டார் சைக்கிள்களில் ஒற்றைச் சக்கர ஓட்டப் பந்தயத்தில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயப் போட்டிகளுக்காக ஒரு இலட்சம் ரூபா வரையில் பணப் பந்தயத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பெரும்பாலானவை பல்வேறு பாகங்களை நிறுவி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும்இ ஒலியை அதிகரிக்கும் வகையில் சைலன்சர்களில் கூடுதல் பாகங்கள் பொருத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இளைஞர்களை கண்டுபிடிக்க மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தை வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிலியந்தலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.