பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த 16 வயது சிறுமியுடன் காதல் தொடர்பு வைத்திருந்தமை உட்பட பல சந்தர்ப்பங்களில் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதன் காரணமாக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 27 வயதான திருமணமான குறித்த பொலிஸ் சார்ஜன்டுக்கு 45 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டரை இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நட்டஈடு வழங்காவிட்டால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
பிரதிவாதி இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை கோரியதுடன், பொலிஸாரை நம்பி சேவையை நாடி வந்த ஒரு குடிமகனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, கடமை தவறியமை பாரிய குற்றமாகும் என பிரதிவாதியிடம் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கையினால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி பலமுறை தற்கொலைக்குக் கூட முயற்சித்ததாக அரசாங்க சட்டத்தரணி லிஷான் ரத்நாயக்க தெரிவித்தார்.
களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர்கள் பெரும் முயற்சி எடுத்து இவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளதால் இந்தச் சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, எனவே கடுமையான தண்டனை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.
அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 3 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் வீதம் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.