கெக்கிராவ பிரதேசத்தில் வர்த்தக கட்டடமொன்றின் கூரையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கெக்கிராவ, ஒலுகரத பிரதேசத்தில் உள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றின் கொங்கிறீட் கூரையில் நேற்று (29) இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ ஒலுகரந்த பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய அமில பிரியதர்ஷன என்ற நபரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர் பல நாட்களாக காணாமல் போயுள்ளதாகவும், அவரது வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், இது தற்கொலையா, இயற்கை மரணமா அல்லது கொலையா என்பதை பொலிஸார் இதுவரை கண்டறியவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.