மன்னார் பகுதியில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னார் உயிலங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பட்டா ரக லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரிலிருந்து பயணித்த இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் உயிலங்குளத்தில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தின் போது, லொறி காட்டுக்குள் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்இ ஒரு மோட்டார் சைக்கிள் இரண்டாக உடைந்துள்ளதுடன், மற்றைய மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.