வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த நபரொருவரின் சடலம் நேற்று (26) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, நெடுங்கேணி, வெடிவெட்டக்கல்லுவைச் சேர்ந்த 66 வயதுடைய செல்லதுரை நிமலநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஸ்டிஸ்டர்லேன்ட் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சிறிது காலத்திற்கு முன்னர் தனது சொந்த கிராமமான வெடிவெட்டக்கல்லுக்கு வந்தவர் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வவுனியா கனகராயன்குளத்தில் உள்ள ஆலயமொன்றில் வருடாந்த உற்சவத்தில் பங்கேற்பதற்காக கடந்த 25ஆம் திகதி வந்த இவர், வேறு ஒருவருடன் உறவினர் வீட்டில் தங்குவதற்காக சென்றுள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு குழு வந்து தன்னையும் குறித்த நபரையும் தாக்கியதாகவும், இதன்போது அவர் உயிரிழந்ததாகவும் மற்றைய நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (26) மாலை வவுனியா பதில் நீதவானால் மேற்கொள்ளப்பட்டது.
மரணம் ஒரு கொலை என்பதால், சம்பவம் குறித்து விசாரணை நடத்த பல குழுக்கள் அமைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.