தனமல்வில பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்கள் மற்றும் அதற்கு உதவிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணையில், குறித்த சிறுமி கடந்த வருடம் முதல் பல்வேறு இடங்களில் இந்த மாணவர்களால் பல சந்தர்ப்பங்களில் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவர்கள் சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ காட்சிகளை எடுத்து சிறுமியை மிரட்டி, அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று கூறி சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று வன்புணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய மாணவர்களின் பெற்றோர்கள் சமூகத்தில் உயர் அந்தஸ்த்து கொண்டவர்கள் என்பதால், இந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்கு பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போது வைத்தியர் ஒருவர் சிறுமியையும் அவரது தாயையும் திட்டி பயமுறுத்தியதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவத்தால் விரக்தியடைந்த சிறுமி மன அழுத்தத்தை தாங்க முடியாமல் வைத்தியசாலையில் இருந்து கீழே குதிக்க முயற்சித்ததாகவும், தனது அறையில் பல்வேறு குறிப்புகளை எழுதியுள்ளதை காணக்கூடியதுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (12) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.