காணாமல் போன ரயில் ஊழியரின் சடலம் பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறையைச் சேர்ந்த 47 வயதான நாயக்ககே சுஜீவ குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொட ரயில் நிலையத்தில் பணிபுரிந்த மேற்படி நபர் நேற்று (06) அதிகாலை 1.30 மணியளவில் காணாமல் போயிருந்தார்.
இவருடன் பணிபுரியும் ஏனையவர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது தெமட்டகொட ரயில் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றிற்கு அருகில் அவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் பணப்பை, கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு ஜோடி காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தெமட்டகொட பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் மரைன் பிரிவினர் நேற்று இரவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், எனினும் அவரது சடலத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ரயில்வே அதிகாரிகளும் பொலிஸாரும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலைமை காரணமாக ரயில் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதனால் காணாமல் போன நபரின் பணப்பை மற்றும் ஏனைய பொருட்கள் கிடைத்த கிணறு மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மற்றுமொரு கிணற்றை பொலிஸ் மரைன் குழுவினர் இன்று காலை சோதித்தனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.