சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அந்த பொய்களில் சிக்கினால் நாடு மீண்டும் நிரந்தரமாக பொருளாதாரம் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனவும் சுட்டிக் காட்டினார்.
காலி கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை நேற்று (10) பிற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் முதல் தடவையாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் என்ற புதிய திணைக்களத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் வகையில் அதன் பிரதான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
கறுவா கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட பத்தாண்டு கால வரைபடம் மற்றும் கறுவாச் செய்கை தொடர்பில் தயாரிக்கப்பட்ட “கறுவா கையேடு” தொழில்நுட்ப பிரசுரமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.