இளம் தலைமுறையினர் விரும்பும் எதிர்கால இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாடு முழுவதும் பரந்துபட்ட உரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு புதிய பயணமொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (25) தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் அம்பாறை எச்.எம். வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
”திருகோணமலையில் இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியில் ஒரு பகுதியை சுற்றுலாத் துறைக்காகவும், எஞ்சிய பகுதியை நிரந்தர இளைஞர் கிராமத்தை உருவாக்குவதற்கும் வழங்க எதிர்பார்க்கின்றேன். அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உங்களது பொழுதுபோக்கிற்காக தாராளமாகப் பயன்படுத்தும் வகையில் இளைஞர் கிராமம்(யொவுன் புர) தயாராகும் என்றே கூற வேண்டும்.
எதிர்வரும் வாரத்தில் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கடனை செலுத்தும் பலம் கொண்ட நாடாக இலங்கை மாறும். அதன்படி, எங்களுக்கு அந்நியச் செலாவணி, உதவி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும். அதன் மூலம் புதிய பயணத்தை ஆரம்பிக்கலாம்.
இந்தப் புதிய பயணத்தை எப்படிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கடன் வாங்கும் பழைய முறைக்கே திரும்பினால் இன்னும் 15 ஆண்டுகளில் மோசமான பொருளாதாரச் சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்க நாம் புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஜப்பான், வியட்நாம், சீனா, கொரியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒவ்வொன்றும் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு மாறியுள்ளன. ஆரம்பத்தில், இந்த நாடுகள் நம் நாட்டை விட வறுமை நிலையில் இருந்தன. ஆனால் இன்று அந்த நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன.
நம் நாட்டில் திறமையான இளைஞர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் அந்நியச் செலாவணியை எவ்வாறு ஈட்டுவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும்.
நமக்கான எதிர்காலத்தை தயாரிப்பதல்ல எமது பொறுப்பு, இளைஞர்களாகிய உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது தான் எமது பொறுப்பு. ஒரு நாட்டை முன்னெற்றுவதற்கு 20 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் நாம் சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது 2048 ஆம் ஆண்டளவில் இலங்கை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று அறிவித்தோம். சிலர் எங்களை அவமதித்தனர்.
2047இல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் கடந்துவிடும். அதன்படி, 2047இற்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 2047இல் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து 2048இல் வளர்ச்சியடைந்த இலங்கையை உருவாக்குவோம். அதற்குத் தேவையான அடித்தளத்தை அமைப்பதைத்தான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே, நாட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாட வேண்டும். என்னுடைய எதிர்காலமோ, இங்குள்ள அமைச்சர்களின் எதிர்காலமோ அன்றி உங்கள் எதிர்காலம்தான் தீர்மானிக்கப்படுகிறது.
அதற்கான விரிவான உரையாடலைத் தொடங்குமாறு இளைஞர் விவகார அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் பழைய நிலைக்கு திரும்ப முடியாது. எண்ணெய் மற்றும் உரம் இல்லாமல் நாம் மீண்டும் கஷ்டப்பட முடியாது. மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அவசியம். அதற்காக நாம் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைக்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.