கரபிஞ்சலந்த, ஹம்பேகமுவ வெவ சரணாலய பகுதியில் மிக நுணுக்கமாக பயிரிடப்பட்ட 2 பாரிய கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படையினர் நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் உடவலவ முகாமின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (10) ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரபிஞ்சலந்த, ஹம்பேகமுவ வெவ சரணாலய பகுதியில் ட்ரோன்களை பயன்படுத்தி இந்த சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த 18,7857 கஞ்சா செடிகளுடன் பின்னவல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சுமார் 20 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 05 அடி உயரமுள்ள 6,725 கஞ்சா செடிகள் கொண்ட தோட்டம் ஒன்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசேட அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சில கஞ்சா செடிகள் மேலதிக விசாரணைகளுக்காக மாதிரிகளாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஏனைய கஞ்சா செடிகள் சம்பவ இடத்திலேயே தீ வைத்து எரிக்கப்பட்டன.