மொரந்துடுவ, பொல்ஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த லசந்த புஷ்ப குமார என்ற 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபருக்கு தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் நீண்டகாலமாக முன்விரோதம் இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மேலும் சில நண்பர்களுடன் மொரந்துடுவ, பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு சகோதரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், வாக்குவாதம் முற்றிய நிலையில், சகோதரியின் கணவர் அவரை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் நீண்ட நேரமாக காயங்களுடன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து கிடந்த நிலையில் அம்பூலன்ஸ் மூலம் கோனடுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்திய நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.