ஹெரோயின் போதைப்பொருளை தனது சூட்கேஸில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது 7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
57 வயதுடைய பாகிஸ்தான் பெண் ஒருவர் கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு விஜயம் செய்ய வருவதாகக் கூறி விமான நிலையத்திலிருந்து இந்த ஹெரோயினை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
இன்று (20) காலை 09.45 மணிக்கு அபுதாபியிலிருந்து எதிஹாட் ஏர்லைன்ஸ் ஈ.வை – 392 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார்.
அவர் கொண்டு வந்த சூட்கேஸின் பொய்யான அடிப்பகுதியில் ஹெரோயின் தனி பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அதில் 02 கிலோ 450 கிராம் எடையுள்ள ஹெரோயின் கையிருப்பு காணப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பெண்ணையும் அவர் கொண்டு வந்த ஹெரோயினையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.