கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மடத்துகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
28 மற்றும் 31 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மடதுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும்இ தம்புள்ளையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டி நோக்கி பயணித்த பேருந்து, அதே திசையில் பயணித்த சிறிய லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். அதன்போது பேருந்தும் லொறியுடன் மோதி வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வயல்வெளியில் உருண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாகவும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் தம்புள்ளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி நேற்று (12) கெக்கிராவ பதில் நீதவான் கித்சிறி அம்பகஹவத்தவிடம் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.