2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்று (12) முற்பகல் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஏற்றுமதி பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை விரைவான அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு நான்கு பிரதான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கும் மத்திய வங்கிச் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அரச கடன் முகாமைத்துவ சட்டம், அரச நிதிச் சட்டம், பொருளாதார பரிமாற்றச் சட்டம் உள்ளிட்ட சட்டமூலங்கள் இந்த ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்த புதிய சட்டங்களை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்த நாட்டிற்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள சகல நிபந்தனைகளும் எதிர்காலத்தில் சட்டமாக கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.இந்தச் சட்டங்களை நறைவேற்றுவதிலே நாட்டின் எதிர்காலம் தங்கியிருப்பதாகவும் அதற்காக அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
நாடு பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் இருந்த போது, நாட்டை மீட்பதற்காக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை உருவாக்கியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டம் இன்று வெற்றியடைந்துள்ளதாகவும், புதிய சட்டங்களை நிறைவேற்றி நாட்டின் எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவான நிதியை ஒதுக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக மாத்திமே இதனை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.