பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஷ்டராஜகல பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபர் அல்லது குழுவொன்று வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து, பின்னர் வீட்டில் இருந்த குறித்த பெண்ணை ஒரு அறையில் கை கால்களை கட்டிய நிலையில் மர்மமான முறையில் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்ததுடன், அவரது சகோதரியும் கணவரும் நேற்றிரவு வெலிகம நகருக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று இரவு அதே பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டிற்கும் சிலர் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது கொள்ளையடிக்க வந்த நபர்கள், சில ஆடைகள், ஒரு ஜோடி காலணிகள், தங்க மோதிரம் மற்றும் பல வகையான மருந்துப் பொதிகளை விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வெலிகம வலான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மாத்தறை பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிகம தலைமையக பொலிஸார் விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.