2007ஆம் ஆண்டு இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்து கலவரம் செய்த சம்பவத்தில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வாவை 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் தரங்கா மஹவத்த முன்னிலையில் இன்று (07) அழைக்கப்பட்டது.
அப்போதுஇ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரான மர்வின் சில்வாவை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவத்தில் சந்தேகநபராக தற்போது நீதிமன்றத்தை தவிர்த்துள்ள லால் பீரிஸ் என்ற சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியாளராக இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் டி. எம். ஜி. சந்திரசேகரன் சாட்சியமளித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது, இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்த சந்தேகநபர் மர்வின் சில்வா தன்னை தாக்கியதாக அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதையடுத்து, அடுத்த சாட்சி விசாரணையை ஜூலை 15ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.