நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணம் மேற்கொண்ட போதே முச்சக்கர வண்டி தீ பிடித்து எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதி வண்டியை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்று உணவு பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டு வந்து மீண்டும் முச்சக்கர வண்டியினை இயக்க முற்பட்ட போது திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
எனினும் பிரதேசவாசிகள் வியாபாரிகள் ஒன்றிணைந்து முச்சக்கரவண்டி முழுமையாக தீ பரவாமல் இருக்க கடும் முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது பலன் அளிக்கவில்லை .
குறித்த தீ விபத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையானது.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.