சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சிறீவரதன் சஞ்சிதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மேற்படி விலாசத்தில் உள்ள அவரது காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும், பின்னர் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய, சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.