இந்த நாட்டில் யார் எதை கூறினாலும், வீண் கதைகள் பேசினாலும் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து, நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படுவதற்கும் சிந்திப்பதற்கும் உள்ள ஒரே ஒரு கட்சி பொதுஜன பெரமுன மட்டுமே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று (01) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
“ஸ்ரீலங்கா பொதுஜனவின் சக்தியை நாட்டுக்கு காண்பிக்க இன்று உங்களால் முடிந்துள்ளது.
நாட்டின் 4 பகுதியிலிருந்தும் கெம்பல் மைதானத்திற்கு வந்து கூடியுள்ள மக்கள், நாம் வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் என்பதை நாட்டுக்கு நிரூபித்துள்ளார்கள்.
பொய்களை கூறி, சேறு பூசி, எம்மை கொள்ளையர்களாக அடையாளப்படுத்தி, நாட்டின் எதிர்காலத்தை இல்லாமலாக்க இன்று பலரும் முயற்சிக்கின்றனர்.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற எம்மால் முடியும் என இன்று நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.
ஒவ்வொரு பேரணியிலும் தொழிலாளர்களை வீதிக்கு இறங்கச் செய்வது யார் என அனைவருக்கும் தெரியும்.
நாட்டை அபிவிருத்தி செய்து, உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை வெற்றிக்கொள்ள அவர்களால் முடியாது.
சிலருக்கு தொழிலாளர் தினத்தில் மட்டுமே தொழிலாளர்களை நினைவுக்கு வரும்.
நமது நாட்டில் தொழிலாளர் தினத்தை கொண்டாட ஆரம்பித்து 91 வருடங்கள் ஆகின்றன.
நான் தொழிற்றுறை அமைச்சராக பொறுப்பேற்கும் வரை, தொழிலாளர்களின் தேவைகளுக்கான எவ்வித சிறப்பு சலுகைகளும் எந்த அரசாங்கத்தாலும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
வரலாற்றை எடுத்து பாருங்கள். நாட்டிலுள்ள அனைத்து தொழிற்றுறை தலைவர்களுடனும் நாம் சிறந்த நண்பர்களாக பணியாற்றியுள்ளோம்.
அவர்களது பிரச்சினைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளோம்.