இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கல்பிட்டிஇ முகத்துவாரம் பகுதியில் உள்ள முட்புதர்களில் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (30) அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த பீடி இலைகளை கண்டுபிடித்துள்ளனர்.
39 மூடைகளில் இருந்த 1230 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் பெறுமதி 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பீடி இலைகள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.