போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பட்டதாரி பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது தாயாரும் வேயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையில் உயர்தர சிங்கள பாடத்தை கற்பிக்கும் வேயங்கொடை, கொரசே பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய பட்டதாரி ஆசிரியை ஒருவரும் அவரது தாயாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேயங்கொடை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிட்டம்புவ மல்வத்தை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் பரிசோதித்த போது, பாடசாலை ஆசிரியையிடம் 2.3 கிராம் ஹெரோயினும், அவரது தாயாரிடமிருந்து 4.5 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய பாடசாலை ஆசிரியை 01 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் பொதிகளை வேறு நபர்களை பயன்படுத்தி நிட்டம்புவ, திஹாரிய, மல்வத்தை, கொரசே உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்துள்ளதுடன், ஈஸி கேஷ் ஊடாக பண பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்கள் தொடர்பான குறிப்பேடு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் வேயங்கொடை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரான ஆசிரியையின் தந்தை வேயங்கொட பிரதேசத்தில் பிரபல போதைப்பொருள் வியாபாரி எனவும், அவர் பெம்முல்ல பொலிஸாரால் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.