கடந்த 9ஆம் திகதி ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுகம பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொல்ல முயற்சித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (20) இரவு கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேத மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது அவர் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
பொலிஸார் பதில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் காயமடைந்த சந்தேக நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலகஹாபிட்டிய – அஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.