நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக நேற்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நியமிக்க பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதிதாக நிறுவப்பட்ட இந்த 20 குழுக்கள் தற்போது செயற்படும் ஒவ்வொரு பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், 04 புலனாய்வு அதிகாரிகள், 02 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 09 அதிகாரிகள் அடங்குகின்றனர்.
கடந்த சில வாரங்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்று வரும் பாதாள உலக செயற்பாடுகளை கருத்திற் கொண்டு பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.