வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, நீல நிறமான புதிய ஐஸ் போதை பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை முகாம் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலையடுத்து, அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய திங்கள் (04) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது கணவர் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.