சாந்தன் தாய் மண்ணில் கால் வைக்க முதல் அவர் உயிரை திட்டமிட்டு பறித்துள்ளார்கள் எனவும், இதுவே எங்கள் மூவருக்கும் நடக்க போகிறது என்பது தெரிகிறது எனவும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரும், இலங்கை திரும்ப முடியாது, சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஒலிநாடா ஊடாக உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் 33 வருடங்களாக சிறையில் சாந்தனுடன் காலத்தை கழித்தவன். இன்று அவர் உயிருடன் இல்லை. அவருக்கு மக்கள் கூடி அஞ்சலி செலுத்துகின்றனர்.
எங்கள் போராட்டத்தை அழிக்க பல சக்திகள் முயன்றன. அதில் ஒன்று தான் ராஜீவ் காந்தி கொலை. அதில் நாங்கள் பலியாக்கப்பட்டவர்கள். எங்கள் ஊடாக எங்கள் மக்களுக்காக போராடியவர்களை நசுக்க பின்னப்பட்ட சதி வலைகள்.
போராட்டத்தை அழிக்க தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை வழங்க மக்கள் மத்தியில் பயத்தை விதைக்க குறியீடாக பயன்படுத்தப்பட்டவர்களே நாம்.
சாந்தனின் உயிர் திட்டமிட்டு பறிக்கப்பட்டதே. சாந்தனுக்கு அநீதி இழைக்கப்பட்டதை மக்கள் வெளிப்படுத்தும் போதே , திரும்ப திரும்ப செய்ய மாட்டார்கள். நாதியற்றவர்கள் என்றால் , திரும்ப திரும்ப நசுக்கவே செய்வார்கள்.
சாந்தன் தாய் மண்ணில் கால் வைக்க முதல் உயிரை பறித்துள்ளார்கள். இதையே தான் எங்கள் மூவருக்கும் செய்ய போகிறார்கள்.
32 வருடங்களாக சிறையில் மனதையும் , உடலையும் திடமாக வைத்திருந்த ஒருத்தர் , சிறப்பு முகாமில் ஒரு வருடத்திற்கு எவ்வாறு இப்படி மாறி போனார். இதில் எங்களுக்கு நியாயமான சந்தேகம் இருக்கு.
மக்களின் அஞ்சலி ஊடாக வெளி உலகுக்கு எமக்கு இழைக்கப்பட்ட அநீதி தெரிய வர வேண்டும் என்றார்.