பாதாள உலகக் குழுவின் தலைவரும், போதைப்பொருள் வியாபாரியாகவும் கருதப்படும் அதிகாரம் முதியன்சேலாவின் ரமேஷ் பிரியஜனக்க எனப்படும் ‘மன்னா ரமேஷ்’ டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மனைவியும் நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஷார்ஜாவில் இருந்து டுபாய்க்கு தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, ஷார்ஜா பொலிஸார் காரை நிறுத்த உத்தரவிட்ட போதும் அதனை மீறி சென்றதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
மன்னா ரமேஷ் செலுத்திய காரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஷார்ஜா பொலிஸார் அந்த காரை நிறுத்தியுள்ளனர்.
மன்னா ரமேஷை உள்ளூர் பொலிஸாரிடம் சிக்க வைப்பதற்காக மற்றுமொரு பாதாள குழு உறுப்பினர் வழங்கிய போலியான தகவல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர் என்பதால், சோதனையின் போது பொலிஸாரிடம் சிக்க வைக்கும் நோக்கில் இந்த தகவலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மன்னா ரமேஷ் மீது 10க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னா ரமேஷை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஷார்ஜா பொலிஸாருடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.